தேவாரம் பாடிய தலமாக இருந்தபோதிலும், முருகனின் அறுபடை வீடுகளுள் இதுவே முதல் தலமாகும். இது குடவரைக் கோயில் சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் இத்தலத்தில்தான் தெய்வானையை திருமணம் புரிந்துக் கொண்டார். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தன்று இத்திருமண விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
மூலவர் 'பரங்கிரிநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். பரங்கிரிநாதர் சன்னதியை அடுத்து முருகப்பெருமான் சன்னதியும், விநாயகர் சன்னதியும் உள்ளது. அம்பாள் தனி சன்னதியில் ஆவுடைநாயகி என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள்.
நக்கீரர் இத்தலத்தில் தான் திருமுருகாற்றுப்படையைப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மூவேந்தரும் இங்கு வந்து வணங்கியுள்ளனர் என்பதை சுந்தரர் தமது தேவாரத்தில் பாடுகின்றார்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழால் போற்றிப் பரவியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|